நீட் தேர்வு எழுதிய தந்தை, மகள்: 50 வயதிலும் பார்மசிஸ்ட் ஆர்வம்

வேலூர்: ராணிப்பேட்டை மையத்தில் மகள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 50 வயதான அவரது தந்தை வேலூர் மையத்தில் ஆர்வத்துடன் நீட் தேர்வு எழுதினார். வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டிகேஎம் மகளிர் கல்லூரியில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீர் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் அவரை நிறுத்தி, ‘பெற்றோர் உள்ளே செல்ல அனுமதி கிடையாது’ என்றனர். அதற்கு அவர், ‘நானும் நீட் தேர்வு எழுத போகிறேன்’ என்றார். இதையடுத்து, அவரின் அனுமதி சீட்டை சோதனை செய்து, தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘நான் ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை சேர்ந்த தயாளன்(50). பார்மஸ்சிஸ்டாக பணிபுரிகிறேன். எனக்கு 2 மகள்கள். மூத்த மகள் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் ராணிப்பேட்டை டிஏவி பெல் மையத்தில் நீட் தேர்வு எழுதுகிறார். நீட் தேர்வு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் நானும் எழுத வந்துள்ளேன்’ என்றார்.

* நீட் தேர்வு எழுதிய 70 வயது தாத்தா

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த 70 வயதான பிரின்ஸ் மாணிக்கம், கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லூரி மையத்தில் நேற்று நீட் தேர்வு எழுதினார். அவர் கூறியதாவது: நான் விவசாயம் படித்து, பிஎச்டி முடித்துள்ளேன். வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு சிறு வயது முதல் டாக்டராக வேண்டும் என்பது கனவு. மாணவர்கள் பலர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தேர்வுக்காக தற்கொலை செய்து கொள்வது என்பது தீர்வாகாது. அப்படி என்ன இந்த தேர்வில் இருக்கிறது? என கண்டறியவே இந்த முறை தேர்வு எழுதினேன் என்றார். இதேபோல மதுரை அருகே உள்ள மாடக்குளத்தைச் சேர்ந்த 55 வயது  ராஜ்ஜியக்கொடி (55)யும் நீட் தேர்வு எழுதினார்.

Related Stories: