பெரியார் பல்கலை செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு நேற்று முந்தினம் நடைபெற்றது. இந்த தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்வியில் 4 ஆப்ஷன்களாக சாதிப் பெயர்கள் கொடுக்கப்பட்டு அதில் எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதி என இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் சாதி ஒழிக்க போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சாதி பற்றிய கேள்வியா என பல்வேறு தரப்பினர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் விவரம் கேட்டபோது, தேர்வில் கேட்கப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வினாவானது பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அப்பாற்பட்ட பேராசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் என்பதால் மாணவர்கள் கைகளுக்கு வினாத்தாள் சென்ற பிறகுதான் இது தொடர்பான விவரங்கள் எங்களுக்கே தெரிய வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வினாத்தாள் குழுவின் தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக உயர் கல்வி துறை செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில்:இந்த கேள்வி தொடர்பாக உயர் கல்வி அழுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு, அந்த விசாரணையின் அறிக்கையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிட பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்:  இந்த கேள்வி தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

பால கிருஷ்ணன் (சிபிஎம் மாநில செயலாளர்): பெரியாரின் பெயரை வைத்துக்கொண்டு இதுபோன்ற கேள்விகளை கேட்டிருப்பது கண்டனதிற்கு உரியது. பல்கலைகழக நிர்வாகம் எப்படி இதனை கண்டுகொள்ளாமல் விட்டார்கள். இது ஒரு மோசமான செயல் என தெரிவிதுள்ளார். முத்தரசன் (இந்திய கம்யூ. மாநில செயலாளர்): வினா தாளில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்று என கேட்டிருப்பது மிகவும்  தவறான செயல். இது போன்ற கேள்விகள் இனிமேல் கேட்க பட கூடாது. கேள்வியை தயாரித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாவளவன் ( விசிக தலைவர்):பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் தமிழகத்தில் மிக தாழ்ந்த ஜாதி என கேட்டிருப்பது கண்டிக்க தக்கது. ஜாதி இல்லை என அனைவரும் கூறிவரும் நிலையில் இது சனாதனத்தின் உச்சமாக கருதப்படுகிறது. பல்கலை கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ராமதாஸ் (பாமக நிறுவனர்):வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது நடந்த  குற்றத்தை மூடி மறைக்கும் செயல்.

வினாத்தாளை பல்கலை நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். சாதி கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை கழகத்தில் இக்கொடுமை  நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: