பாரதி மகளிர் கல்லூரியில் திருடுபோன 2 ஆயிரம் புத்தகங்கள் பறிமுதல்; 20 மின் விசிறி, 3 மோட்டார்களும் மீட்பு: ஒரே நாளில் 6 பேர் சுற்றிவளைத்து கைது

தண்டையார்பேட்டை: சென்னை பிராட்வே சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியை, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரி நேரடியாக இயங்காமல் இருந்ததை பயன்படுத்தி, கல்லூரி வளாகத்தில் இருந்த 85க்கும் மேற்பட்ட மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

மேலும், கல்லூரியின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த புத்தகங்கள் மற்றும் மின் மோட்டார் திருடு போனது தெரிந்தது. இதுபற்றி கல்லூரியின் முதல்வர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அப்பகுதியில் உள்ள ஒரு புத்தக கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, பாரதி கல்லூரியின் சீல் இருந்ததும், அந்த புத்தகங்கள் விற்பனைக்கு இருந்ததும் தெரியவந்தது.

இதுபற்றி விசாரித்தபோது, அப்பகுதியை சார்ந்த வினோத் குமார், வீரமணி, தீபன், வெங்கடேசன், பாபு, சூரி, ஆகிய 6 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர். இவர்கள், கல்லூரி வளாகத்தில் இருந்து பொருட்களை திருடி பழைய இரும்பு கடையில் விற்றது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 20 மின் விசிறிகள், 3 மோட்டார்கள், 2000 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை வாங்கிய பாஸ்கர், ராமநாதன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்ணன், வடிவேலன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். அமைச்சரின் ஆய்வின் அடிப்படையில் திருடுபோன பொருட்கள் குறித்து எழுந்த புகாரை அடுத்த 24  மணி நேரத்திலேயே கண்டுபிடித்த போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories: