பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வால் கொதித்தெழும் மக்கள்: பல்வேறு நாடுகளில் போராட்டம், வன்முறை அமெரிக்காவில் பைடன் செல்வாக்கு சரிவு

வாஷிங்டன்: ரஷ்யா-உக்ரைன் போரால் உலகம் முழுவதும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளன. இதனால் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடி, மக்களின் கோபத்தால் பாகிஸ்தான், இலங்கையில் அரசுகள் கவிழ்ந்து, ஆட்சி மாற்றமே ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, இவற்றின் விலை அதிகரிப்பு, நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க வரி உயர்வு போன்ற பிரச்னைகளால் ஹங்கேரி, பனாமா, ஹெய்தி உட்பட பல நாடுகளில் மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. வன்முறைகளும் நடக்கின்றன.

உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவும், இந்த விலைவாசி உயர்வில்  இருந்து  தப்பவில்லை. இந்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. மாதம் தோறும் பணவீக்கத்தின் அளவு தொடர்ந்து 1.1 சதவீதம் என்ற அளவில் அதிகமாகி வருகிறது. தற்போது, அமெரிக்காவின் பணவீக்கம் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 1981ம் ஆண்டில்தான் இதுபோன்ற விலைவாசி உயர்வை அமெரிக்க மக்கள் சந்தித்துள்ளனர். கடந்த மாதத்தில் மட்டுமே எரிவாயு விலை 3.5 சதவீதம் அதிகமாகி, 11.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இதேபோல், இருப்பிட செலவு, மருத்துவ செலவு போன்றவைகளும் அதிகமாகி இருப்பதால் தவிக்கின்றனர். இந்த கோபம் எல்லாம் தற்போது அதிபர் பைடன் மீது திரும்பி இருக்கிறது. கருக்கலைப்பு உரிமை சட்டம் ரத்து, பொது இடங்களில் நடத்தப்படும் துப்பாக்கிச்சூடுகளை கட்டுப்படுத்த தவறியது, விலைவாசி உயர்வு பிரச்னை போன்றவையால் மக்களிடம் இருந்த பைடனின் செல்வாக்கு  படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த பிரச்னைகளை அரசியலாக்கி கொண்டிருக்கும் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் செல்வாக்கு அதிகமாகி வருகிறது.

* சிக்கனத்துக்கு மாறிய அமெரிக்க மக்கள்

அமெரிக்க மக்கள் சுதந்திரத்தை அதிகம் விரும்புபவர்கள். செலவு செய்வதிலும் மிகவும் தாராளம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அவர்களால் செலவை கட்டுப்படுத்த முடியவில்லை. வருமானத்துக்கு மீறி செலவு செய்ய வேண்டிய நிலைக்கு  தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, வேறு வழியின்றி உணவு பொருட்கள், எரிவாயுக்காக செய்யும் செலவை கணிசமாக குறைத்து, சிக்கனத்தை கடைபிடிக்கின்றனர்.

Related Stories: