வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் இருக்கைகள், குடிநீர் வசதி; பொதுமக்கள் மகிழ்ச்சி

வாலாஜாபாத்: தினகரன் செய்தி எதிரொலியால், வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ெபாதுமக்களுக்கு இருக்கைகள், குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், அலுவலகம் வரும் பொதுமக்கள் தினகரன் நாளிதழுக்கு தங்களது வாழ்த்து தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் தென்னேரி, வாலாஜாபாத், மாகரல் ஆகிய மூன்று குறு வட்டங்களை இணைத்து தாலுகா அலுவலகங்களாக  உருவாக்கப்பட்டன. இப்பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் உள்ளவர்கள் தங்களின் புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், ஆதார் அட்டை, பட்டா, பட்டாவில் பெயர் மாற்றம், நில அளவை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாக அதிகாரிகளை சந்திக்க நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் அரசு அலுவலர்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும்போது அவர்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளும் இந்த அலுவலகத்தில் இல்லை என கடந்த 9ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்பேரில் வட்டாட்சியர் லோகநாதன், பொதுமக்கள் பயன்படும் வகையில் இருக்கைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். தற்போது, தாலுகா அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள், குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இதனால், பொதுமக்கள் தினகரன் நாளிதழ்க்கு தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

Related Stories: