ஒன்றிய அரசு நியாயமான விலை நிர்ணயம் செய்யக்கோரி ஓசூரில் 3 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக்: ரூ.500 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு

ஓசூர்: ஓசூரில் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யக்கோரி 3 ஆயிரம் குறு, சிறு தொழில்நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், குட்டி ஜப்பான் என அழைக்கப்படுகிறது. அசோக் லேலண்டு, டைட்டன், டிவிஎஸ், ஏத்தர் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் 1 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக உற்பத்தி செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. கட்டுமான செலவு, எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு, மின் கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் தொழில் நஷ்டமடைந்து நிறுவனங்களை நடத்த முடியாமல் கந்துவட்டி கடனில் சிக்கி தவிப்பது அதிகரித்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை கோரி அரசுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லாததால், உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்றும், இன்றும் 3 ஆயிரம் தொழிற்சாலைகளை மூடி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஓசூர்-தளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக ரூ.500 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டு, இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்முனைவோர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஹோஸ்டியா சங்கத்தலைவர் வேல்முருகன் கூறுகையில், எங்களது முக்கிய கோரிக்கையான ஜாப் ஆர்டர்களுக்கான புதிய விலை நிர்ணய விவகாரத்தில் பெரு நிறுவனங்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இம்மாதம் 31ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து தொழிற்சாலைகளையும் மூடி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

Related Stories: