பெருங்குடி மண்டல குழு கூட்டம் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை: தீர்மானம் நிறைவேற்றம்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டல குழு கூட்டம், புழுதிவாக்கத்தில் உள்ள மண்டல அலுவலக மன்ற கூடத்தில் நேற்று  முன்தினம் நடந்தது. மண்டல குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் சீனிவாசன், செயற் பொறியாளர்கள் முரளி, சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர் மணிகண்டன் (திமுக) பேசுகையில், ‘‘மேடவாக்கம் பிரதான சாலையில் கால்வாய் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை விபத்து நடக்கும் முன் இடமாற்றி தர வேண்டும்,’’ என்றார்.

பாபு (திமுக) பேசுகையில், ‘‘பள்ளிக்கரணை பிரதான சாலையில் உள்ள மின் கம்பங்களை இடம் மாற்றி தர வேண்டும். பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்,’’ என்றார்.

ஜெயபிரகாஷ் (அதிமுக) பேசுகையில், ‘‘ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் வரியை குறைக்க வேண்டும்,’’ என்றார்.

சர்மிளா திவாகர் (திமுக) பேசுகையில், ‘‘எங்களது பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும், குறைந்த மின் அழுத்த பிரச்னையால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனை சரிசெய்ய வேண்டும்,’’ என்றார்.

ஷெர்லி ஜெய் (திமுக) பேசுகையில், ‘‘எனது வார்டில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, கொசு மருந்து அடிக்க வேண்டும்,’’ என்றார்.

இதற்கு பதிலளித்து மண்டல தலைவர் ரவிச்சந்திரன் பேசுகையில், ‘‘பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் நவீன இயந்திரம் மூலம் ஆகாய தாமரைகளை அகற்றி, முறையாக பராமரிக்கப்படும். அனைத்து வாடுகளிலும் கொசு மருந்து அடிக்கப்படும். கவுன்சிலர்களின் முக்கிய கோரிக்கையான மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: