சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க. நகர் தெற்கு பகுதி 75, 76வது வட்டம் சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு வேருக்கு விழா 37வது நிகழ்வாக முத்தமிழ் மொழியரங்கம் என்ற தலைப்பில் 75வது வட்டச் செயலாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திருவிக சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

அப்போது, அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, `கோயில் நிலங்களை ஏமாற்றி வைத்துள்ளவர்களிடம் இருந்து அதை மீட்பதற்கு காங்கிரஸ் அரசு, காமராசர், அண்ணா, பக்தவச்சலம், ஓமந்தூரார், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது அரசால் மீட்க முடியவில்லை. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அதை மீட்டது. இதுதான் தாய் 8 அடி என்றால் குட்டி 16 அடி, ஆனால் நம் தலைவர் 32 அடியை தாண்டி உள்ளார். பாஜ தலைவர் அண்ணாமலை, மதத்தையும், மத விரோதத்தையும் வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்யவும் காலூன்றவும் பார்க்கிறார்.

நாங்கள் என்றும் ஆன்மீகத்திற்கு விரோதிகள் அல்ல. அனைவரும் பறைசாற்றக்கூடிய வகையிலேயே நமது திராவிடம் மாடல் ஆட்சியானது நடைபெற்று வருகிறது. நமது இயக்கமானது பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் வந்த இயக்கம். அதற்கு சான்றாக சென்னையில் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நூலகம் உள்ளது. அதேபோல் மதுரையில் நமது கலைஞரின் பெயரிலும் நூற்றாண்டு நூலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது’ என பேசினார். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சாமிகண்ணு, தமிழ்வேந்தன், வெங்கடேசன், லோகேஷ், துலுக்காணம், உதயசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: