வியட்நாமில் இருந்து கடத்தல் டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல்

புதுடெல்லி: வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட 45 கைதுப்பாக்கிகளை டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். வியட்நாமில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த விமானத்தில் பயணம் செய்த இந்திய தம்பதியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த இரண்டு பெட்டிகளில் சுமார் 45 கைதுப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும், என்.எஸ்.ஜி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளை சோதனை செய்ததில் அதன் மதிப்பு சுமார் ரூ.22 லட்சம் இருக்கும் எனவும், அனைத்து துப்பாக்கிகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாராக இருப்பதாகவும் என என்.எஸ்.ஜி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இருவரிடம் விசாரணை நடத்தியதில் இவர்கள் ஏற்கனவே ரூ.12 லட்சம் மதிப்புள்ள 25 கை துப்பாக்கிகளை கடத்தியதாகவும், இரண்டாவது முறையாக இப்போது 45 துப்பாக்கிகள் கடத்தி வந்தபோது சிக்கியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சுங்க துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் தம்பதியினர் எனக்கூறி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல சென்று துப்பாக்கிகளை கடத்தி வந்ததும் சுங்கத்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: