தாவரவியல் பூங்கா நடைபாதையில் 2 மாதத்தில் 120 கடைகள் கட்ட முடிவு

*விரைவில் பணி துவக்கம்; சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி : தாவரவியல் பூங்கா நடைபாதை வியாபாரிகளுக்காக 2 மாதத்திற்குள் 120 கடைகள் கட்டிக் கொடுக்கப்படும் என ஊட்டி நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை நம்பி ஏராளமான சிறு வியாபாரிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களில் கடைகள் வைத்து விற்பனை செய்து வந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் உள்ள நடைபாதைகளில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் நடைபாதையில் கடைகள் வைத்திருந்தனர்.

பெரும்பாலானவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைபாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கர். இவர்களுக்கு சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டுமே வியாபாரம் ஆகும். மேலும், இவர்களில் பெரும்பாலான குடும்பங்கள் அன்றாடம் இங்கு வியாபாரம் செய்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் பூங்கா செல்லும் நடைபாதை, சாலையோரங்களில் சிறு சிறு கடைகளை வைத்திருந்தனர். இந்நிலையில், தாவரவியல் பூங்கா அருகே கடை வைத்துள்ள திபெத் அகதிகள் சிலர், நடைபாதை கடைகளால் தங்களுக்கு இடையூறாக உள்ளது எனக்கூறி என நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்ததாக தெரிகிறது.

இந்த புகாரை தொடர்ந்து, தாவரவியல் பூங்கா நடைபாதையில் கடைகள் வைத்துள்ளவர்களை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், இப்பகுதியில் கடை வைத்திருந்த சிறு வியாபாரிகள் தங்களது கடைகளை அகற்றினர். மேலும், தங்களுக்கு இதே பகுதியில் கடைகள் வைத்துக் கொடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், வியாபாரிகளுடன் நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதில், விரைவில் தாவரவியல் பூங்கா நடைபாதை அருகே இரு மாதங்களுக்குள் 120 கடைகள் கட்டிக் கொடுக்கப்படும். அதுவரை வியாபாரிகள் பூங்கா நுழைவாயில் மேல் பகுதியில் உள்ள சாலையோரங்களில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதனால், வியாபாரிகளும் தங்களது போராட்டங்களை கைவிட்டுள்ளனர். மேலும், பூங்கா நுழை வாயில் பகுதியின் மேற்புறத்தில் உள்ள சாலைகளில் தற்காலிகமாக கடைகள் வைக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் காந்திராஜன் கூறியதாவது: ஊட்டி அரசு தாவரவில் பூங்கா நுழைவாயில் பகுதியில் உள்ள நடைபாதைகளில் கடை வைத்துள்ள வியாபாரிகள் நலனை கருத்தில் கொண்டு, அதே பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறுன்றி 120 கடைகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஓரிரு நாட்களிலேயே துவக்கப்படும். இப்பணிகளை 60 நாட்களுக்குள் முடித்து, பூங்கா பகுதியில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சிறு வியாபாரம் செய்து வரும் மக்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு கமிஷனர் கூறினார்.

Related Stories: