சூளகிரி அருகே பட்டா நிலத்தில் அமைத்த குடிசைகளை அகற்றிய அதிகாரிகள்-வீடு கட்ட அனுமதி கேட்டு முதல்வருக்கு மனு

சூளகிரி : சூளகிரி அருகே சென்னப்பள்ளி கிராமத்தில் பட்டா நிலத்தில் அமைத்த குடிசைகளை அதிகாரிகள் அகற்றியதால், அதே இடத்தில் வீடு கட்ட அனுமதிக்க வேண்டும் என கிராம மக்கள் தமிழக முதல்வர் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.சூளகிரி தாலுகா, சென்னப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த 111 பேர், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 2009ம் ஆண்டு வீடு கட்ட நிலம் கேட்டு மனு அளித்தனர். அதை தொடர்ந்து 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் வீடு கட்ட நிலம் ஒதுக்கி பட்டா வழங்கப்பட்டது. பட்டா பெற்ற மக்கள் வீடு கட்ட முயன்றபோது, பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருப்பதால் சமத்துவபுரம் அமைத்து வீடு கட்டி தருவதாக அதிகாரிகள் கூறியதால் வீடு கட்டும் பணியை கைவிட்டனர்.

பின்பு 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சமத்துவபுரம் அமைத்து கொடுக்க பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் பட்டா இருந்தும் வீடு கட்ட முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஒதுக்கிய இடத்தில் 111 பேரும் குடிசை போட்டு குடியேற முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த சென்னப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் அப்பகுதிக்கு சென்று குடிசை போட யார் அனுமதி கொடுத்தது எனக்கூறி குடிசையை அங்கிருந்து அகற்றினார்.

இதனால் மன உளைச்சலடைந்த உமாசங்கர், மலர்கொடி, சாந்தம்மா, ஜெயலட்சுமி உள்ளிட்டோர், வீடின்றி தவிப்பதால் வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளனர்.

Related Stories: