ஜமீன் எண்டத்தூர் கிராமத்தில் உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: ஜமீன் எண்டத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுராந்தகம் ஒன்றியத்தில்  ஜமீன் எண்டத்தூர் கிராமம் உள்ளது.  இங்கு, கடந்த 1972ம் ஆண்டு உயர்நிலை பள்ளி துவங்கப்பட்டது. ஜமீன் எண்டத்தூர் கிராமம் மற்றும் சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து பயின்று வருகின்றனர். தற்போது, பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இது குறித்து கிராம மக்கள் சார்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. 11 மற்றும் 12ம் வகுப்புகள் இப்பள்ளியில் இல்லாத காரணத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுராந்தகம், பவுஞ்சூர் வரையில் சென்று படிக்க வேண்டிய சூழல் உள்ளது.  மேலும், இப்பகுதியில் இருந்து மதுராந்தகம், பவுஞ்சூர் பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமப்பட்டு நெடுந்தூரம் சென்று கல்வி பயில வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து வசதிகள் இல்லாததால் பெரும்பாலான மாணவர்கள், பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.  இதனால்,  மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

எனவே, மாணவர்களின் கல்வி நலனை கருதி கடந்த 2019ம் ஆண்டு பள்ளி மேலாண்மை குழு சார்பாகவும், பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர்களின் பெற்றோர் சார்பாக ஊராட்சியில் நடந்த பல கிராம சபை கூட்டத்தில் பள்ளியை தரம் உயர்த்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை பரிசீலனை செய்த மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் விரைவில் பள்ளி தரம் உயர்த்தப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரையில் அதற்கான  முயற்சியிலும் மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜமீன் எண்டத்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி நலனை கருதி ஜமீன் எண்டத்தூர் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: