அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு முறையீடு..!

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு முறையீடு செய்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதேநேரத்தில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது அங்கிருந்த எடப்பாடி ஆதரவாளருக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டு தாக்குதல் போன்ற சம்பவங்களும் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருசிலர் தலைமை அலுவலகம் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்குள்ள அறைகளுக்கு சென்று சில பொருட்களையும் சேதப்படுத்தினர்.

இதனால் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ராயப்பேட்டை பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் இணை ஆணையர் பிரபாகரன், வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து சீல் வைக்கப்போவதாக தெரிவித்தனர். அவரை அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர். அவர் அறையில் இருந்து வெளியில் வந்ததும், முதலில் பொதுச் செயலாளர் அறை மற்றும், கூட்ட அரங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்துடன் வந்தவர்கள், கடப்பாறையால் உடைத்ததால், சீல் வைக்க தாமதமானது. பின்னர் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஓரளவு தணிந்தது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதிஷ் குமார் முன்பு எடப்பாடி சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி; அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது என்றும், வருவாய்த்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக நாங்கள் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த மனுவை தாக்கல் செய்யுங்கள் நாளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று நீதிபதி சதீஷ்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவின் முழுமையான விவரம் இன்னும் வெளியாகவில்லை.

Related Stories: