ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் பயங்கர மோதல் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைப்பு: கல்வீச்சு, கத்திக்குத்து, வாகனங்கள் உடைப்பால் பரபரப்பு; 144 தடை உத்தரவு, போலீஸ் குவிப்பு, தலைமை அலுவலக சாலையே போர்க்களமானது

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் சென்னை ராயப்பேட்டை பகுதியே போர்களமானது. இருதரப்பும் கத்தி, கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மோதி கொண்டனர். இதில் தொண்டர்கள் பலர் காயமடைந்தனர். வாகனங்கள் உடைக்கப்பட்டன. பதற்றமான சூழ்நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர். இதனால் அதிமுக அலுவலகத்தில் பதற்றம் அதிகரித்தது. இதை தொடர்ந்து, அதிகாரிகள் அவரை வெளியேற்றி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை தொடர்பான பிரச்னையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு தரப்பும் தனித்தனியாக பிரிந்துள்ளது. இதனால், இரண்டு தரப்பிலும் கடும் வார்த்தைபோர்கள் நடந்து வருவதால் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் இருந்து காலை 7 மணி அளவில் பிரசார வாகனத்தில் வானகரம் நோக்கி புறப்பட்டார். பொதுக்குழு அரங்கில் எடப்பாடி தரப்பினர் திரண்டு வந்த நிலையில், ஓபிஎஸ் திடீரென அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வதாக அறிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதி முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு, கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேநேரத்தில், தான் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதாக கூறி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதில் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரிந்ததால், தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களை அனுப்பி வைத்தார். அதன்படி மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், கந்தன், இளைஞர் அணி மாநில இணை செயலாளர் டாக்டர் சுனில் ஆகியோரது தலைமையில் தொண்டர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அதிமுக பொதுக்குழு தொடங்கிய நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் இருந்து ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் புறப்பட்டனர். ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை சென்றடைந்ததும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தடுத்தனர். ெதாடர்ந்து கல்வீசி தாக்கினர். இதனால் பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் கல் வீச்சில் ஈடுபட்டனர்.

இரு தரப்பிலும் தொடர்ந்து கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதில் பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவ்வை சண்முகம் சாலை அருகே எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ் வாகனம் மீது கல்வீசி தாக்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இதில் அந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஓபிஎஸ் வேனில் சாய்ந்து விழுந்தார். அந்த ரத்த கரை ஓபிஎஸ் வேனில் அப்படியே படிந்தது. இதனால் சில நிமிடம் ஓபிஎஸ் பயணம் தடைபட்டது.

அதன்பின் அவரது வாகனத்துக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இதையடுத்து, ஓபிஎஸ் வாகனம் அதிமுக அலுவலகம் நோக்கி சென்றது. இன்னொரு பக்கம் அதிமுக அலுவலக வாசலில் எடப்பாடி - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ரோட்டை பங்கு பிரித்து கொண்டு மாறி மாறி  பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீச்சில் ஈடுபட்டதால், ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எம்.பாபு உள்பட 3 பேரின் மண்டை உடைக்கப்பட்டு ரத்தக் காயங்களுடன் கிடந்தனர். ஒருவருக்கு கத்திக் குத்தும் விழுந்தது. அவர்களை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கலவரத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பஸ்கள், கார் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டது. மேலும் ஒரு காரை அடித்து நொறுக்கினர். அலுவலகத்துக்கு முன் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சேர்களை போட்டு அமர்ந்திருந்தனர். அவர்கள் ஓடும்போது கல்வீச்சில் இருந்து தப்பிக்க தலையில் சேரை வைத்தபடி ஓடினர். இதனால் சேர்களும் சிதறிக்கிடந்தன. அதிமுக அலுவலகம் உள்ள பகுதி கலவர பூமியாக காணப்பட்டது. இதையடுத்து, முன்னேறி சென்ற ஓபிஎஸ், அதிமுக தலைமை அலுவலகம் வந்தடைந்தார். அவர் வந்த பின்பு காட்சிகள் அனைத்தும் தலைகீழாக மாறின. அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றினர். கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டன.

அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி படங்கள் கிழித்து எறியப்பட்டன. அவற்றை தீயிட்டு கொளுத்தினர். அவரது ஆதரவாளர்களும் விரட்டியடிக்கப்பட்டனர். அதிமுகவினருடன் ரவுடி சி.டி.மணியின் ஆதரவு ரவுடிகளும் கூடியிருந்தனர். இதனால், கம்பு, தடியால் எடப்பாடி தரப்பினர் மீது நடத்தப்பட்டன. போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். அதில் டாக்டர் சுனில், லோகநாதன் ஆகியோருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. அதேநேரத்தில் கட்சி அலுவலகம் முன்பு ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக கோஷங்களை அவரது ஆதரவாளர்கள் எழுப்பியபடியே இருந்தனர். ஆதரவாளர்கள் பூட்டுகளை உடைத்த நிலையில் ஓபிஎஸ் அலுவலகத்திற்குள் சென்றார். உள்ளே சென்ற ஓபிஎஸ் அலுவலகம் மேலே ஏறி பால்கனியில் நின்று ஜெயலலிதா போல தொண்டர்களை பார்த்து கையை அசைத்தார். பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், பெங்களூர் புகழேந்தி, சுப்புரத்தினம், கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அந்த நேரத்தில் தலைமை அலுவலகத்தில் இருந்த சாவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஓபிஎஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டன. ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ராயப்பேட்டை பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு கருதி இணை கமிஷனர் பிரபாகர், துணை கமிஷனர் மிட்டல், பகலவன் ஆகியோரது தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வருவதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் குவிந்தனர். இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

இந்நிலையில், இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலைக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு அருகே குவிந்ததால் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்தனர். அதபோன்று மறுபுறம் இந்தியன் வங்கி அருகேயும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டதால்  அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியும், பொதுக்குழுவில் இருந்து நேராக கட்சியின் தலைமை அலுவலகம் வருவதாக அறிவித்தார். இதனால் அங்கு கூடுதல் பதட்டம் ஏற்பட்டது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் இணை ஆணையர் பிரபாகரன், வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து சீல் வைக்கப்போவதாக தெரிவித்தனர். அவரை அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர். அவர் அறையில் இருந்து வெளியில் வந்ததும், முதலில் பொதுச் செயலாளர் அறை மற்றும், கூட்ட அரங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்துடன் வந்தவர்கள், கடப்பாறையால் உடைத்ததால், சீல் வைக்க தாமதமானது. பின்னர் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிகாரிகள் சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டார். பின்னர் அவர் காரில் புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர், அதிமுக அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, கேட்டுக்கும் சீல் வைக்கப்பட்டது. அந்த தெருவுக்குள், அதிமுகவினர் யாரும் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அந்த தெருவில் வசிப்பவர்களை மட்டுமே போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரம் கட்சி அலுவலகம் தொடர்பாக மோதல் நடந்ததால், அந்தப் பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. முதலில்

பொதுச் செயலாளர் அறை மற்றும், கூட்ட அரங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

* ஆவணங்களை கைப்பற்றிய ஓபிஎஸ்

அதிமுக அலுவலகத்தை கைப்பற்றிய ஓ.பன்னீர்செல்வம் அங்கு அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதோடு அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்கள் மற்றும் பல அறைகளின் சாவிகளை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதன் பின் வாசல் வழியாக வெளியே கொண்டு சென்றனர். பின் வாசல் வழியாக வெளியே வந்து அந்த கோப்புகளை வாகனத்தில் ஆதரவாளர்கள் வைத்தனர். இதை தடுக்க எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிரமாக முயன்றனர். இதனால் எடப்பாடி - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக் கொண்டனர். இந்த மோதல் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம், வன்முறை காடாக மாறியது.  

* ஓபிஎஸ் தரப்பு மீது திருட்டு புகார்

கட்சி அலுவலகத்தில் பூட்டை உடைத்து, உள்ளே சென்று கதவை உடைத்து ஆவணங்களை திருடியதாகவும், ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஓபிஎஸ் தரப்பினர் மீது அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

* எடப்பாடி பழனிசாமி போல் நடித்து காட்டிய ஒபிஎஸ் ஆதரவாளர்கள்

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கூட்டத்தில் உள்ளவர்கள் எடப்பாடி தவழ்ந்தபடியே சசிகலா காலில் விழுந்ததை நினைவு கூர்ந்து தத்ரூபமாக நடித்து காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Stories: