கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர்திறப்பு, ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு; 18 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 18 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று இரவுக்குள் ஒருலட்சம் கனஅடியாக நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு  பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால்,  கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர்  அணையின் நீர்மட்டம் 122 அடியாகவும், 65 அடி உயரம் கொண்ட கபினியின்  நீர்மட்டம் 62.50 அடியாக வும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து  அதிகரித்து வருவதால், இரு அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.

இதையடுத்து,  அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கபினி  அணையில் இருந்து விநாடிக்கு 26 கனஅடியும், கேஎஸ்ஆர் அணையில் இருந்து  விநாடிக்கு 26 கனஅடியும் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர்  பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டு வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று மாலை விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின்அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் பாறைகளை மூழ்கடித்து புதுவெள்ளம் பொங்கி பாய்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் இன்று 2வது நாளாக தடை நீடிக்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றங்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 3,149 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8,010 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று 98.29 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 98 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.27 டி.எம்.சியாக உள்ளது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு இன்று காலை வினாடிக்கு 1,04,356 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று இரவுக்குள் ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: