2 ஆண்டுகளுக்குப் பின் நெல்லையப்பர் தேரோட்டம்; இன்று கோலாகலம் ரத வீதிகளில் மக்கள் வெள்ளம்

நெல்லை: நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக இன்று அதிகாலை 12.15 மணிக்கு விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடநத 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கோயில் உள்பகுதியிலேயே எளிமையாக கொண்டாடப்பட்டது.

 2 ஆண்டுகளுக்கு பின்னர் இத் திருவிழா இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்தது.

மேலும் கோயில் கலையரங்கில் ஆன்மீக கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

8ம் திருநாளான நேற்று மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதராக தங்கத்திருவோடு ஏந்தி தங்கச்சப்பரத்தில் வீதி உலா நடந்தது. வழிநெடுக ஏராளமான பக்தர்கள் தங்கத்திருவோட்டில் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். தேர் சுவாமி சன்னதி வரை இழுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தேர் கடாட்ச வீதி உலாவாக சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் நகர் வீதி உலா நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். அதிகாலை 2.30 மணிக்கு முருகன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு சுவாமி சன்னதி அருகே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை முதலே தேரோட்டத்திற்காக பக்தர்கள் திரண்டனர். இதை முன்னிட்டு நெல்லை நகரமே விழாக்கோலமாக காட்சியளித்தது. காலை 9.22 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் பெரிய தேர் சிறப்பு தீபாராதனையுடன் பஞ்சவாத்தியங்கள் முழுங்க வடம் பிடித்து இழுக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

கலெக்டர் விஷ்ணு, எம்எல்ஏக்கள் அப்துல்வஹாப், நயினார் நாகேந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்,  மாநகராட்சி மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாவட்ட ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அமிதாப், கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு, சந்திரசேகர், உலகநாதன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், போலீஸ் அதிகாரிகளும் வடம் பிடித்து இழுத்தனர். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் அதிக உற்சாகத்துடன் வடம் பிடித்தனர். ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. மேலும் வீட்டின் மாடிகளிலும் இருந்து ரதவீதிகளில் தேர் ஓடி வரும் அழகை கண்டு பக்தர்கள் ரசித்தனர். நமச்சிவாய கோஷம் முழங்கி பக்தர்கள் நெல்லையப்பர், காந்திமதி அம்மனை வழிபட்டனர்.

ரதவீதிகளில் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் குடிநீர் வழங்கினர்.

தேரோட்டத்தை முன்னிட்ட ரதவீதிகளிலும் நெல்லை டவுன் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு டவுன் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றப்பட்டது. தேரோட்டம் காணவந்த பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு நெல்லை டவுன் ரதவீதிகளில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கைங்கர்ய டிரஸ்ட் மற்றம ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து நெல்லை டவுன் பாரதியார் தெரு லிட்டில் பிளவர் பள்ளியிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமையில் டிஐஜி பிரவேஷ்குமார், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில் உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: