அபே அனுதாப அலை ஜப்பான் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு: 125 சீட் கிடைக்கும் என கணிப்பு

டோக்கியோ: ஜப்பானில் நேற்று நடந்த நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஜப்பானில் நாடாளுமன்ற மேல்சபைக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போதுதான், ஆளும் விடுதலை  ஜனநாயக கட்சிக்கு ஆதரவு திரட்ட நாராவில் நடந்த கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டு கொல்லப்பட்டார். இதனால், தேர்தலுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் பலத்த பாதுகாப்பு இடையே வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் அபே சுட்டு கொல்லப்பட்டதால் உருவான அனுதாப அலையினால், ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட அபேயை சுட்டு கொன்ற இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டான். முன்னாள் பிரதமர் அபேயின் உடலும் டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய உடல் நாளை மறுதினம் அடக்கம் செய்யப்படுகிறது. தேர்தலுக்கு பின்பு ஜப்பான் ஒலிபரப்பு நிறுவனம், இதர ஊடகங்கள் வெளியிட்ட கருத்து கணிப்பில் அபேயின் ஆளும் கட்சி 125 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், 2025ம் ஆண்டு நடைபெற உள்ள அடுத்த தேர்தல் வரை ஆட்சி நடத்துவதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: