5வது நாளாக தொடர்கிறது; எஸ்பி வேலுமணி பினாமி நிறுவனம், வீட்டில் ஐடி ரெய்டு: உதவியாளர், டிரைவர், ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி

கோவை: கோவையில் எஸ்பி வேலுமணி பினாமிகளின் நிறுவனம், வீடுகளில் வருமானத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 5வது நாளாக தொடர்கிறது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர். நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராகவும் உள்ளார். இவர் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். அவருக்கு பினாமி. இவரது வடவள்ளி வீடு, பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு, நண்பர்கள் வீடு என 6 இடங்களில் கடந்த புதன்கிழமை பிற்பகல் 11 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையில் சந்திரசேகர் வீடு, உறவினர்கள் வீட்டில் இருந்து ஆவணங்களை வருமான வரி துறை அதிகாரிகள் கைப்பற்றினர். குறிப்பாக சந்திரசேகர் வீட்டில் முக்கியமான ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக தெரிகிறது. கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவர் என்பதால் அனைத்து ஒப்பந்த பணிகளையும் சந்திரசேகர், கேசிபி சந்திரபிரகாஷ் செய்து வந்துள்ளனர். அதில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள சந்திர பிரகாஷின் கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். பீளமேட்டில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது. அதிகாரிகளின் விசாரணையில் சந்திரபிரகாஷ் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருகிறார். மேலும் அங்கிருக்கும் ஆவணங்கள் குறித்து கேள்வி எழுப்பினால் மழுப்பலாக பதில் கூறுகிறார். தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறி வருகிறார். இந்நிலையில், இந்த ரெய்டை தொடர்ந்து சந்திரபிரகாசின் டிரைவர் பிரபு என்பவர் திடீரென மாயமானார்.

அவரை பிடித்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். தேடி சென்ற போது அவருக்கு பதிலாக அவரது நண்பர் லால் என்பவர் அங்கிருந்தார். அவரின் செல்போனில் பேச வைத்து பிரபுவை அதிகாரிகள் வரவழைத்தனர். அவரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். மேலும் சந்திரபிரகாசிடம் விசாரித்து கொண்டிருந்த போது அவரது டிரைவர் மற்றும் உதவியாளரான பிரபு யாரிடம் பேசியுள்ளார்? என்ன பேசினார்? என்பது குறித்து அழைப்பு வரலாறை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து பிரபுவிடமும் கிடுக்கிப்பிடி விசாரணையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். சந்திரபிரகாஷ் அதிகாரிகளின் கேள்விகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர்கள் வரை விசாரணை நடக்கிறது.

இந்நிலையில், நேற்று இரவு மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணி உதவியாளர் சந்தோசின் தம்பி வசந்தகுமாரின் குனியமுத்தூர் வீட்டில் ஐடி அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். இந்த சோதனை இன்று காலையும் தொடர்கிறது. அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தொடர் சோதனை அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பினாமிகள் சொத்துகள் வாங்கி குவிப்பா?: மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணியின் பினாமிகள் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கோவையில் உள்ள சில ஓட்டல்கள் யார் பெயரில் உள்ளது? யாராவது மிரட்டி வாங்கியுள்ளனரா? என்ற கோணத்திலும் ஐடி அதிகாரிகள் சில ஓட்டல்களுக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்களுக்கு எங்கெல்லாம் சொத்து உள்ளது, அவை யார் பெயரில் உள்ளது, முறையாக சம்பாதித்து வாங்கியதுதானா? என்றும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை தொடர்கிறது.

25 அதிகாரிகள் கோவையில் முகாம்: கோவையில் கடந்த 5 நாட்களாக 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கேசிபி நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் சம்பந்தப்பட்ட சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியிருந்தது. அதனால் நேற்று இரவு சென்னையில் இருந்து வருமான வரி துறையின் ஒரு குழுவினர் கோவை வந்துள்ளனர். தற்போது 25க்கும் மேற்பட்ட வரிமான வரி அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு கேசிபி நிறுவனம், அவரது வீடு உள்பட 3 இடங்களில் சோதனையும், அவர் சம்பந்தப்பட்ட 5க்கும் மேற்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Related Stories: