வருசநாடு அருகே பாசி படர்ந்த தரைப்பாலத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வருசநாடு : வருசநாடு அருகே, சிங்கராஜபுரம் ஊராட்சியில், கீழபூசணியூத்து செல்லும் சாலையின் குறுக்கே அல்லால் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. வருசநாடு பகுதியில் பெய்த கனமழையால் அல்லால் ஓடையில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால், தரைப்பாலம் முழுவதும் பாசிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால், தரைப்பாலம் வழியாக செல்லும் பைக், ஆட்டோ, ஜீப், உள்ளிட்ட வாகனங்களின் டயர்கள் பாசிகளில் வழுக்கி கீழே கவிழுந்து விபத்தில் சிக்கி வருகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. சிங்கராஜபுரம் கிராமத்தை கடந்து பூசணியூத்து, சாந்திபுரம், காந்திபுரம், புதுக்கோட்டை கோரையூத்து உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது தரைப்பாலத்தில் பாசிகள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

இதனால், வெளியூர் செல்லும் பொதுமக்கள் மாற்றுப்பாதைகள் வழியாக பல கி.மீ சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தரைப்பாலத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில்‌, புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: