பெரியபாளையம் அருகே பஸ் நிழற்குடையில் வைக்கோல் அகற்றம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே பயணிகள் நிழற்குடையில் வைக்கோல் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினகரனில் செய்தி வெளியானது. இதனால் ஊராட்சி நிர்வாகம் வைகோலை அகற்றி நடவடிக்கை எடுத்தது. எல்லாபுரம் ஒன்றியம் அத்தங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள பஸ் பயணிகள் நிழற்குடை  கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ளது. இதற்கிடையில், இப்பகுதியில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் இந்த நிழற்குடையில்  நின்று அங்கிருந்து திருவள்ளூர், பெரியபாளையம், வெங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோ உள்ளிட்டவை ஏறி சென்று வருகின்றனர்.

இதனையடுத்து இந்த  பேருந்து நிழற்குடையில் தனி நபர் ஒருவர் அத்துமீறி ஆக்கிரமித்து வைக்கோல் நிரப்பி வைத்துள்ளதால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்தபடி பேருந்துகளில் ஏறி செல்கின்ற அவலநிலை ஏற்பட்டது. எனவே  சம்பந்தப்பட்ட  நிர்வாகம் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பகுதி மக்கள் மாணவர்கள் என பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து கடந்த 8ம் தேதி நமது தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து இதனை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக பஸ் நிழற்குடையில் இருந்த வைகோலை அகற்றி சுத்தம் செய்தது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: