டெல்லி, உ.பி போலீஸ் கைது செய்த நிலையில் செய்தி நிறுவன இணை நிறுவனருக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி, உத்தரபிரதேச போலீசார் செய்தி நிறுவன இணை நிறுவனர் முகமது ஜூபைரை கைது செய்த நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணைய செய்தி நிறுவனமாக ‘ஆல்ட் நியூஸ்’ செயல்படுகிறது. இதன் இணை நிறுவனர் முகமது ஜூபைர் இவரை, சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கருத்து, புகைப்படம் வெளியிட்டதற்காக டெல்லி போலீசார் கடந்த மாதம் 27ம் தேதி கைது செய்தனர்.

போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து முகமது ஜூபைருக்கு சட்டவிரோதமாக நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது செல்போன், லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இருந்து தகவல்களையும் முகமது ஜூபைர் அழித்துள்ளது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே உத்தரபிரதேச போலீசாரும் மத உணர்வுகளை தூண்டியதாக கூறி முகமது ஜூபைர் மீது வழக்குபதிவு செய்தனர். இவ்வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜூபைருக்கு ஜாமின் வழங்க மறுத்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். இன்று ஜாமின் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மின்னணு ஆதாரங்களை முகமது ஜூபைர் சேதப்படுத்தக் கூடாது.

இந்த வழக்கு தொடர்பாக புதிய கருத்துகளை பதிவிடக்கூடாது. சீதாபூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியைவிட்டு வெளியேறக்கூடாது. 5 நாட்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. உத்தரபிரதேச காவல்துறைக்கு இவ்வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories: