எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக பாஜ தலைவர் காஸ் விலையை உயர்த்தும் ஒன்றியஅரசை எதிர்ப்பாரா? வைகோ கேள்வி

சென்னை: எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக பாஜ தலைவர், சமையல் எரிவாயு  விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை எதிர்ப்பாரா என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: கடந்த 2021 ஜனவரி 1ம் தேதி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு 14.2 கிலோ உருளையின் விலை ரூ.710 ஆக இருந்தது. தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த மே மாதம் ரூ.1018.50 ஆக இருந்து வந்தது. இந்நிலையில், 6ம் தேதி  சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.1068.50 ஆக ஒன்றிய பாஜ அரசு உயர்த்தி இருக்கிறது. 19 மாதங்களில் சமையல் எரிவாயு உருளை ரூ.358.50. அதாவது 50.44 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது.

இந்த விலை உயர்வுக்கு பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், இந்திய ரூபாய் மதிப்புச் சரிவும் காரணம் என்று ஒன்றிய அரசு கூறுவதை ஏற்க முடியாது. 2014 மே மாதம், மோடி தலைமையிலான பா.ஜ. அரசு பொறுப்பேற்ற போது, சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.410.50 ஆக இருந்தது. பாஜ ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.658 அதிகரித்து, தற்போது சமையல் எரிவாயு விலை ரூ.1068.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. 2014ம் ஆண்டில் இருந்த அளவுக்குத்தான் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2022 ஜூலை மாதமும் இருக்கிறது.

இந்நிலையில், சமையல் எரிவாயு விலையை உருளை ஒன்றுக்கு ரூ.410 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் தொடர்ச்சியாக மக்களை வாட்டி, வஞ்சித்து வரும் மோடி அரசு, சமையல் எரிவாயு விலையை ரூ.1068.50 ஆக அதிகரித்து, மக்கள் மீது சுமையை ஏற்றிக்கொண்டே வருவது கண்டனத்திற்குரியது. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக பாஜ தலைவர், சமையல் எரிவாயு விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வரும் ஒன்றிய அரசை எதிர்த்து போராடுவாரா? சமையல் எரிவாயு உருளையின் மானியத்தை அதிகரிக்க வேண்டும்; விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: