மாங்காடு சுற்று வட்டாரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது: 22 சவரன் பறிமுதல்

குன்றத்தூர்: மாங்காடு சுற்று வட்டார பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து, கொள்ளையடித்து வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 22 சவரனை பறிமுதல் செய்தனர். மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக  பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மாங்காடு போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாங்காடு பிரதான சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் வந்தனர். போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், இருவரும் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால், இருவர் மீதும் போலீசாருக்கு  சந்தேகம் ஏற்பட்டது. மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், இருவரும் கொளத்தூரை சேர்ந்த மாணிக்கம் (37), முருகானந்தம் (41) என தெரிய வந்தது. மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து தான் மாங்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், பல்வேறு இடங்களிலிருந்து திருடிய 22 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் இருவர் மீதும் சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: