கம்மாளம்பூண்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில்; தபசு நிகழ்ச்சி கோலாகலம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கம்மாளம்பூண்டி கிராமத்தில் உள்ள தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு தினமும் கோயில் வளாகத்தில்மகாபாரத சொற்பொழிவும் மாலையில் கட்டைக் கூத்தும் நடந்து வந்தது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அர்ச்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சுமார் 120 அடி உயரம் கொண்ட தபசு மரத்தில் அர்ச்சுனன் வேடமிட்ட கட்டைக் கூத்து கலைஞர் மகாபாரத சொற்பொழிவு ஆற்றிக்கொண்டே தபசு மரத்தில் உச்சியில் ஏறி தீபாராதனை காண்பித்தார். தபசு மரத்தின் மேலே இருந்தவாறு அர்ச்சுணன் வேடமிட்ட கட்டைக் கூத்து கலைஞர் வில்வ இலை, எலுமிச்சை, மஞ்சள், குங்குமம், தாலிச் சரடு உள்ளிட்டவைகளை பக்தர்களிடையே வீசினார்.

குழந்தை வரம் கோரும் பக்தர்கள், திருமணமாகாத பெண்கள் அவற்றை பக்தியோடு எடுத்துச் சென்றனர்.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கம்மாளம்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: