சென்னைக்கு கடத்த முயன்றபோது மினி வேனுடன்; ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்

வேலூர்: பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்ற  ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்காவை மினிவேனுடன் வேலூர் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தமிழக போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளையும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்திலும் பள்ளிகொண்டா டோல்கேட் பகுதியில் அடிக்கடி குட்காவை பறிமுதல் செய்து வருகிறனர். இதற்கிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஊசூர் அடுத்த ரெண்டேரிகோடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலூரை நோக்கி சென்ற ஒரு மினி வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் போலீசார் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் பெங்களூரை சேர்ந்த அச்சுவர்த்தன் (22) என்பதும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு 30 மூட்டைகளில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா போதை பொருட்கள் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து குட்காவுடன் மினிவேனையும் அச்சுவர்த்தனையும் அரியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சுவர்த்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: