வானிலை ரேடார் பழுது கொல்கத்தா திரும்பிய தனியார் விமானம்: விளக்கம் கேட்டு டிஜிசிஏ நோட்டீஸ்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இருந்து சீனாவின் சாங்கிங் நோக்கி நேற்று முன்தினம் தனியார் சரக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமானத்தில் வானிலையை காட்டும் ரேடார் கருவி செயல்படவில்லை என்பதை விமானி கண்டறிந்தார். எனவே, பாதுகாப்பு கருதி விமானத்தை தரையிறக்க அவர் முடிவு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா விமான நிலையத்திலேயே விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் துபாய் சென்ற விமானம் எரிபொருள் டேங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. இதேபோல், காண்ட்லா - மும்பை விமானத்தில் நடுவானில் சென்றபோது கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது. கடந்த 18 நாட்களில் 8வது முறையாக இந்த நிறுவனத்தின் விமானத்தில் தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்த விமான நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று வாரத்தில் இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories: