ஆப்கான் மதகுரு சுட்டுக் கொலை: மகாராஷ்டிராவில் பயங்கரம்

நாசிக்: ஆப்கானிஸ்தானை சேர்ந்த மதகுருவை, மகாராஷ்டிராவில் மர்ம கும்பல் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் யோலா நகரில் நேற்றிரவு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதி மதகுரு ஒருவர் மீது அடையாளம் தெரியாத நான்கு பேர் கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை தொடர்ந்து அவர்கள் ஆப்கானிஸ்தான் மதகுரு மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவரது தலை மற்றும் கழுத்தை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்த போலீசார் கொலையான மதகுருவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நாசிக் போலீசார் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்த க்வாஜா சையத் சிஷ்டி (35) என்பவரை, இங்குள்ள மக்கள் ‘சுபிபாபா’ என்று அழைக்கின்றனர். அவர் மதக் கூட்டங்கள் அல்லது கல்லறைகளில் பிரசங்கம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரை பின்தொடர்ந்த கும்பல் ஒன்று, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டது. கொடூரமான கொலைக் குற்றத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: