சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு

சேலம்: சேலம் ஜங்ஷன் அருகே குறுகிய தரைப்பாலத்தை 10 மணி நேரத்தில் பெரிய தரைப்பாலமாக மாற்றியமைத்தனர். அந்த இடத்தில் இன்னும் பாதியளவு பாலத்தை விரைவில் அமைத்திட ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களிலும் பழைய ரயில்வே மேம்பாலங்கள், தரைப்பாலங்களை கணக்கெடுத்து, அவற்றின் உறுதித்தன்மையை ஆராய்ந்து சீரமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்த நேரத்தில் பெரிய அளவிலான ரயில்வே பாலங்களை சீரமைத்தனர்.

இந்தவகையில் சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்-ஈரோடு மார்க்கத்தில் மிகவும் பழமையான பாலங்கள் மாற்றியமைக்கப்பட்டது. அதேபோல், கோட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரயில்வே தரைப்பாலங்களை பெரிய அளவில் மாற்றி அமைத்து வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கும், மேக்னசைட் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட பகுதியில் கோட்ட அலுவலகம் அருகே குறுகிய ரயில்வே தரைப்பாலம் உள்ளது. அந்த இடத்தின் அருகில் தான், சேலம்-பெங்களூரு மார்க்கமும், சேலம்-சென்னை மார்க்கமும் பிரிகிறது. இதனால், அந்த இடத்தில் இருக்கும் குறுகிய ரயில்வே தரைப்பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு பெரிய தரைப்பாலமாக மாற்றியமைக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் தரைப்பாலத்தை மாற்றியமைக்கும் பணியை கோட்ட பொறியியல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்காக சேலம் வழியே செல்லும் 16 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என முன்கூட்டியே அறிவித்தனர். தரைப்பால சீரமைப்பு பணியை நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு தொடங்கினர். தரைப்பாலத்தின் மேல் செல்லும் தண்டவாளத்தை முதலில் அப்புறப்படுத்தினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் கொண்டு குழி தோண்டி, பழைய தரைப்பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு, நல்ல உறுதித்தன்மையுடன் பெரிய தரைப்பால சிலாப்புகளை அமைத்தனர்.

இப்பணியை மாலை 6 மணிக்குள் முடித்திட திட்டமிட்டு, வேகமாக செய்தனர். ஆனால், இரவு 10.05 மணிக்கு தான் பணி முழுமையாக முடிவடைந்தது. 10 மணி நேரத்தில் அந்த இடத்தில் பெரிய தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பணி நேர நீட்டிப்பால் சேலம் வழியே சென்ற 25 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது.  இரட்டை வழிப்பாதையான அந்த இடத்தில் ஒருவழி தண்டவாள பகுதியில் மட்டும் புதிய தரைப்பாலத்தை ஏற்படுத்தியுள்ளனர். மீதியுள்ள மற்றொரு ரயில் பாதை பகுதியில் தரைப்பாலத்தை ஏற்படுத்த அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்த வருகின்றனர். அந்த இடத்தில், தண்டவாளத்தில் இருந்து ஜல்லிக்கற்களை நேற்றைய தினம் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மற்றொரு நாளில் அங்கு தண்டவாளத்தை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு, தரைப்பாலத்தை ஏற்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த தரைப்பால மாற்றியமைப்பு பணியை முழுமையாக முடிக்க இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் ரயில்கள் இயக்க நேரத்தில் மாற்றத்தை முறையாக அறிவித்து, அப்பணியை மேற்கொள்ளவுள்ளோம். இதேபோல், இன்னும் சில இடங்களில் பழைய ரயில்வே தரைப்பாலங்கள் மாற்றியமைக்கப்படவுள்ளது,’’ என்றனர்.

Related Stories: