2 பேரை கொல்ல சதி திட்டம் மாணவன் உள்பட 3 பேர் கைது: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

அம்பத்தூர்: முன் விரோத தகராறில் 2 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மாணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொரட்டூர் கங்கை அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், மர்ம நபர்கள் தங்கி, கொலை திட்டம் தீட்டுவதாக  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில், அந்த வீடு சரித்திர பதிவேடு குற்றவாளி அப்புன் ராஜ்  (44) என்பவரின் வீடு என தெரியவந்தது. இதையடுத்து, கொரட்டூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அந்த வீட்டிற்கு சென்றபோது, அங்கிருந்த 6 பேரில், 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.

 3 வாலிபர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில்,  கொரட்டூரை சேர்ந்த கல்லூரி மாணவன் ஆகாஷ் (20), வியாசர்பாடி அஜய் (20), பட்டரைவாக்கம் நிஷாந்த் (20) ஆகியோர் என்பதும், இவர்கள், அப்புன் ராஜின் கூட்டாளிகள் என்பதும் தெரிய வந்தது. மேலும் விசாரணையில், அப்புன்ராஜ் கடந்த 03.12.21ம் தேதி ஆகாஷ், பிரசாந்த் மணி ஆகியோரை வெட்டிய வழக்கில் சிறையில் இருப்பதும், அவரது உத்தரவின் பேரில், ஆகாஷ், பிரசாந்த் மணியை கொலை செய்ய இவர்கள் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 2 பட்டா கத்திகள், ஒரு கிரைண்டிங் மெஷின்,  ஒரு வெல்டிங் மிஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பியோடிய சங்கர் (18) உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: