சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் நேற்று காலை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் திருவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும்.

இந்த விழாக்களில் தேரோட்டமும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது.

தேருக்கு முன்னால் பெண்கள் கோலமிட்டபடி சென்றனர். இசை கலைஞர்கள் வாத்திய கருவிகளை இசைத்தபடி தேருக்கு முன்னால் சென்றனர். சிவபக்தர்கள் சிலர் உற்சாகத்தில் நடனமாடியபடி சென்றனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு வீதிகளையும் தேர் வலம் வந்து நேற்றிரவு நிலையை அடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக கோயிலின் உள்ளே இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு அர்ச்சனைகள் நடைபெற்றது. நாளை (7ம் தேதி) இரவு முத்து பல்லக்கு ஊர்வலத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories: