நடிகை பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை தடயவியல்; பரிசோதனைக்கு அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை மீண்டும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை போலீசார் கைப்பற்றி விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்த மெமரி கார்டில் உள்ள காட்சிகள் உண்மையானது தானா? என்பதை கண்டறிய தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதன் பிறகு விசாரணை நீதிமன்றத்தில் இது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடிகையின் பலாத்கார காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாக பாலச்சந்திரகுமார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு போலீசார் விசாரண நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள மெமரி கார்டில் இருந்து பலாத்கார காட்சிகள் வெளியானதாக சந்தேகம் உள்ளது. எனவே அதை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் போலீசின் கோரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி குற்றப்பிரிவு போலீசார் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மெமரி கார்டை மீண்டும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப இன்று  உத்தரவிட்டது. இரண்டு நாட்களில் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் 7 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: