படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு வளரவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்

சென்னை: மாணவர்கள் படிக்கும் காலத்தில் சமூக, அரசியல் உணர்வோடு வளர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினாராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்,

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி  சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக்கேயன், மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் கலைப் பிரிவில் 1613 பேர், அறிவியல் பிரிவில் 1597 என மொத்தம் 3210 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள சிற்றுண்டி வசதி கொஞ்சம் சேதமாகியுள்ளது என மாணவர்கள் என்னிடம் இங்கு வந்தவுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இதை வெகுவிரைவில் சரி செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதைத்தொடர்ந்து தயாநிதி மாறன் எம்.பி கூறியதாவது: மாணவர்கள், மாணவிகள் இணைந்து படிக்கும் சென்னையின் முதல் கல்லூரி மாநிலக் கல்லூரி தான். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்திற்கு பல அரசியல் தலைவர்களை இந்த கல்லூரி கொடுத்துள்ளது. கல்வியில் மதச்சாயத்தை சிலர் பூசிக்கொண்டிருக்கும் வேளையில் கல்வி தான் மனிதனின் நிலையான சொத்து என நம் முதல்வர் கூறிவருகிறார்.

கல்வி சொத்தை யாராலும் திருட முடியாது. படிப்பிற்கு அடுத்தபடியான வேலைவாய்ப்பு தமிழ்நாட்டிலேயே கிடைக்கும் வகையில் முதல்வர் நேற்று பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். எனவே மாணவர்கள் நன்கு படித்து இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். பின்னர் அமைச்சர் பொன்முடி பேசும்போது, ‘‘தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் அரசுக் கல்லூரி இந்த கல்லூரி. நான் முதல்வன், கல்லூரிக் கனவு உள்ளிட்ட உயர்கல்வி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் சமுதாயம் மற்றும் அரசியல் பற்றியும் படிக்க வேண்டும். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, முதல்வரின் உங்களில் ஒருவன் உள்ளிட்ட புத்தகங்களை படித்தாலே தமிழ்நாட்டின் வரலாறு, சமூக அமைப்பு, அரசியல் பற்றிய புரிதல் கிடைக்கும். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே சமுக, அரசியல் உணர்வோடு வளர வேண்டும்.

குறிப்பாக பெண் கல்வியை ஊக்கப்படுத்த முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர 7.5% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இலவச கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Stories: