மாமல்லபுரம் அருகே ரூ.10 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் திறப்பு: இளைஞர்கள் மகிழ்ச்சி

மாமல்லபுரம்: தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியால், மாமல்லபுரம் அருகே ₹ 10 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதி இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை தெருவில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக கடந்த 2019ம் ஆண்டு ₹ 10 லட்சம் ரூபாயில் உடற்பயிற்சி கூடம் கட்டி முடிக்கப்பட்டது. அந்த, உடற்பயிற்சி கூடம் 4 ஆண்டுகளாக முறையாக  பராமரிக்கப்படாமல் வீணாக இருந்தது. மேலும், அருகில் உள்ள முட்புதற்களில் இருந்து பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் உடற்பயிற்சி கூடத்திற்குள் உலா வந்தது.

பல லட்சம், செலவில் கட்டி முடிக்கப்பட்டு பூட்டியே இருக்கும் உடற்பயிற்சி கூடத்தை திறக்க அப்பகுதி இளைஞர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் இளைஞர்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் பயன்பாடின்றி இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கட்டி முடிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக திறக்காமல் மூடியே உள்ள உடற்பயிற்சி கூடத்தை இளைஞர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்த செய்தி கடந்த மே 12ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, எச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி சம்பத், துணை தலைவர் கோவிந்தாமி ஆகியோர் நேற்று காலை உடற்பயிற்சி கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதில், ஊராட்சி செயலாளர் ராணி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தி, வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு எச்சூர் ஊராட்சி இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: