சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1,25,244 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்: 60 திட்டங்கள் மூலம் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு; தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதே அரசின் இலக்கு

சென்னை: சென்னையில் நடந்த ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு தமிழ்நாட்டை ஒரு ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதுதான் இந்த அரசினுடைய இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசின் தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நேற்று நடந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடந்த நிகழ்ச்சியில், வெளியிட்டார். மேலும், மாநிலத்தில் நிதித் தொழில் நுட்பங்கள் பரவலாக பின்பற்றப்படுவதை அதிகரிக்கும் வகையில், டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ்  திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் திட்டத்திற்கான இணையதளத்தையும் ((https://tntecxperience.com) முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதி தொழில்நுட்ப முதலீட்டு களவிழா -TN PitchFest - தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டு களவிழா, முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. வழிகாட்டி நிறுவனமும், startup TN நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்கின்றன. இந்த நிகழ்விற்கான விவரங்களை https://tntecxperience.com/users/tnpitchfest என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். மாநாட்டில், 11 நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. நிதி தொழில்நுட்பக் கொள்கையின் கீழ் ஊக்குவிப்பு சலுகை வழங்குவதற்கு நிதி நுட்ப ஆட்சிமன்றக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 2 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகுப்பு சலுகை அளிப்பதற்கான ஆணைகளையும் முதல்வர் நிறுவனங்களுக்கு வழங்கினார்.

65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. 59,871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16,420 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்பு தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 22,252 கோடி ரூபாய் முதலீட்டில், 17,654 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினையும் அவர் தொடங்கி வைத்தார். 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு, உயிர் அறிவியல் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022-ஐ வெளியிட்டார். 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தொடர்ந்து,  மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் நம்முடைய தமிழ்நாடு 3வது இடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக அமைந்திருக்கிறது. 14வது இடத்தில் இருந்து, இன்றைக்கு தமிழ்நாடு 3வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இது, இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய ஒரு நற்சான்றிதழ். ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திலேயே இத்தகைய இமாலயச் சாதனையை நாம் அடைந்திருக்கிறோம். இதற்கு முழுமுதல் காரணமாக அமைந்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதேபோல, இந்தத் துறையின் செயலாளர் கிருஷ்ணன்,அவருக்கு துணைநிற்கக்கூடிய அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவரையும் நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை 5 மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். இந்த மாநாடு, ஆறாவது மாநாடாக இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அனைவருக்குமான வளர்ச்சி- அனைத்துத் துறை வளர்ச்சி- அனைத்து மாவட்ட வளர்ச்சி- அனைத்து சமூக வளர்ச்சி - அமைதி, நல்லிணக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ மாநிலத்தை நோக்கி இந்தியத் தொழிலதிபர்கள் - உலக நிறுவனங்கள் வரத் தொடங்கியதன் அடையாளமாக இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

முதலாவதாக, தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். இரண்டாவதாக, தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். மூன்றாவதாக, உலகத்தின் மூலை முடுக்கிற்கெல்லாம், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சென்றடைய வேண்டும். நான்காவதாக, மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதன்மூலம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும். தமிழ்நாடு அரசின் அனைத்துத் தொழில் முயற்சிகளும் இந்த நான்கு இலக்குகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதன் அடையாளம் தான் தமிழகத்தை நோக்கி தொழில் நிறுவனங்கள் வருவது.

தமிழக அரசின் மீது அபார நம்பிக்கை வைத்து, தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முன்வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் தொழில் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அனுமதிகளையும் பெறுவதற்கும், உங்கள் தொழில் சிறந்திடவும், உறுதுணையாக இருப்போம் என்று உங்களுக்கெல்லாம் நான் உறுதி தரக் கடமைப்பட்டிருக்கிறேன். இன்றைய மாநாட்டின் சிறப்பம்சமாக, நிதிநுட்பத் துறைக்காக பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தில் ஒரு நிதிநுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு நிதிநுட்ப ஆட்சிமன்றக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  டி.என்-டெக்ஸ்பீரியன்ஸ் திட்டம் மூலம் தொழில்நுட்பச் சேவைகள், ஒரே குடையின் கீழ் அளிக்கப்படும். இதற்கான இளைய அறிவுசக்தி உருவாக்கப்பட்டு வருகிறது. என்னுடைய கனவுத் திட்டமாக இருக்கக்கூடிய ‘நான் முதல்வன்’ திட்டம் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்தத் திட்டத்தின் குறிக்கோள்களை அடைந்திடும் பொருட்டு, தமிழக அரசு, இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து, நிதிநுட்ப அறிவுச் சூழல் அமைப்பை உருவாக்க, தொழில் மற்றும் கல்வித் துறைகளுடன் இணைந்து பணியாற்றும்.  

தொழில் மற்றும் கல்வித்துறைகள் இணைந்து, இன் போசிஸ் நிறுவனத்துடன் கூட்டாக இந்த முன்முயற்சி செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) சென்னையில் குறைந்தபட்சம் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்ட ஒரு நிதி நுட்ப நகரத்தை படிப்படியாக உருவாக்க இருக்கிறது. இங்கே, 11 நிதிநுட்பத் திட்டங்களுக்கு நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருக்கிறோம். உங்கள்   நிதிநுட்பத் தீர்வைகள் மூலம், இந்த மாநிலத்தினை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கு உங்கள் ஆதரவை இந்த நேரத்தில் நான் வேண்டுகிறேன். திமுக அரசு ஆட்சிக்கு வந்து, இந்த ஓராண்டு காலத்தில், எடுத்த முயற்சிகளின் காரணமாக, இதுவரை 192 ஒப்பந்தங்கள் போட்டப்பட்டிருக்கிறது.

இதன் மொத்த மதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த ஆண்டு ஈர்த்த முதலீடுகளைவிட, இந்த ஆண்டு இருமடங்கு முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்று ஒரு கட்டளையிட்டேன். அதற்கேற்றவாறே, இன்று(நேற்று) மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்தால், இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது.  இது, கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிக முதலீடுகள். உலகளவில் அதிகமாக பேசப்பட்டு வரும் வளர்ந்து வரும் துறையான செமிகண்டக்டர் உற்பத்திக்கான உயர் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை-25,600 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் அமைப்பதற்கு IGSSV நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டிருக்கிறது.

52 ஆயிரத்து 695 கோடி ரூபாய் முதலீட்டில் ஆக்மே நிறுவனம் தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உற்பத்தி திட்டத்தை அமைக்க இருக்கிறது. இது தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவப் போகிறது. தொழில் புரிவதற்கு எளிதான சூழலமைப்பு கொண்ட மாநிலங்களில், அகில இந்திய அளவில் 2020ம் ஆண்டில் 14வது இடத்திலிருந்த நம்முடைய தமிழ்நாடு, தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளதற்கு இதுதான் காரணம். மூன்றாவது இடத்தில் இருந்து விரைவில் முதலிடத்திற்கு வருவோம். அதற்கான திட்டமிடுதலைத் தொடங்கி விட்டோம் என்பதன் அடையாளம் தான் இந்த மாநாடு. புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதோடு நம்முடைய கடமை முடிந்து விடுவதாக நாங்கள் இருந்து விடுவது இல்லை.

அதனால் தான் ஒப்பந்தங்கள்-நிறுவனங்களின் தொடக்க விழாவாக இது மாறி வருகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு மாநாடுகளிலேயே இந்த மாநாடுதான் மிகப் பெரிய மாநாடாக அமைந்துள்ளது. சமூக நீதி மாநிலமான தமிழ்நாடு- கூட்டாட்சித் தத்துவத்தை முன்னெடுக்கும் தமிழ்நாடு- சகோதரத்துவ மண்ணான இந்த தமிழ்நாடு-இந்த வரிசையில் தொழில்துறையில் சிறந்த தமிழ்நாடாகவும் உயர வேண்டும். தமிழ்நாட்டு அறிவாற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் தொழில் நிறுவனங்களும் வர வேண்டும். அந்தத் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தகுதி படைத்தவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களும் உருவாக வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம். அதற்கு இத்தகைய முதலீட்டு மாநாடுகள் அடித்தளமாக அமையட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பூஜா குல்கர்னி, டாடா பவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பிரவீன் சின்ஹா, ஆக்மே குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மனோஜ்குமார் உபாத்யாய், இயக்குநர் சசி சேகர், கூபிக் பிவி நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் பீட்டர் வான் மீர்லோ, அயல் நாட்டு தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின், கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  மூன்றாவது இடத்தில் இருந்து விரைவில் முதலிடத்திற்கு வருவோம். அதற்கான திட்டமிடு தலைத் தொடங்கி விட்டோம்.

* தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது என்ற செய்தி மிகப்பெரிய வரலாற்று சாதனையாக அமைந்திருக்கிறது.

* 14வது இடத்தில் இருந்து, இன்றைக்கு தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்திருக்கிறது. இது, இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய ஒரு நற்சான்றிதழ்.

* ஆட்சிக்கு வந்து ஓராண்டிலேயே இத்தகைய இமாலய சாதனையை அடைந்திருக்கிறோம்.

* அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை 5 மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். இந்த மாநாடு, ஆறாவது மாநாடாக நடந்து கொண்டிருக்கிறது.

Related Stories: