ஊட்டி நகரில் நடைபாதைகளில் குப்பைகளை கொட்டிய கடைகளுக்கு அபராதம்-நகராட்சி அதிரடி

ஊட்டி :  ஊட்டி நகரில் இரவு நேரங்களில் நடைபாதைகளில் குப்பைகளை வீசி எறிந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.ஊட்டி நகரம் மற்றும் வார்டு பகுதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். ஊட்டி நகர பகுதிகளில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் அதிகம் உள்ளதால் கமர்சியல் சாலை, பூங்கா சாலை, லோயர் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை வேளைகளிலும், இரவு நேரங்களிலும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் போன்ற மக்காத குப்பைகள் தனியாகவும், மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசி பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள், சிஎப்எல் பல்ப்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்களை தனியாகவும் பிரித்து வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் பெரும்பாலனோர் குப்பைகளை முறையாக பிரித்து வழங்குவதில்லை. மேலும் பொது இடங்களில் வீசி செல்கின்றனர்.

இதேபோல் நகரில் கடை வைத்துள்ளவர்கள் இரவு கடைகளை மூடும் போது, கடையில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளையும் சாலை மற்றும் நடைபாதையில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதி அசுத்தமாக மாறி விடுகிறது. இந்நிலையில் தாவரவியல் பூங்கா சாலை நடைபாதையில் பிளாஸ்டிக் குப்பைகள் வீசி எறியப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. நகராட்சி ஆணையர் காந்திராஜன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் மகாராஜன், மேற்பார்வையாளர் மனோகரன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 3 கடைகளில் இருந்து குப்பைகள் நடைபாதையில் வீசி எறியப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம், ஒரு கடைக்கு ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குப்பைகளை முறையாக தூய்மை பணியாளர்களிடம் பிரித்து வழங்காமல் பொது இடங்களில் வீசி எறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

Related Stories: