காலரா நோய் பரவி வருவதால் காரைக்காலில் பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் குடிநீரில், கழிவு நீர் கலந்ததன் காரணமாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருநள்ளாறு நெடுங்காடு கோட்டுச்சேரி டி.ஆர். பட்டினம், அம்பகரத்தூர் பூவம் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் ஜிப்மர் மருத்துவ ஆய்வு குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடந்த 2 வாரங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி காரணமாக 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் கடந்த இரண்டு வாரங்களில் 700 பேர் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 13 பேருக்கு காலரா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலையை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப் படுத்தி உள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு வீடாக சென்று நேற்று ஆய்வு நடத்தினர்.

மேல ஓடுதுறை, மதகடி, சர்ச் வீதி தல தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் அந்த வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் குழாய் குறித்து ஆய்வு செய்தனர். கழிவுநீர் வடிகால் ஓரத்தில் உள்ள குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காலரா நோய் பரவல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொது மக்களுக்கு காட்சிய குடிநீரை குடிக்க வேண்டும் நோய் தொற்று இருப்பு அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

144 தடை உத்தரவு அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவி வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆட்சியர் முகமது மன்சூர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் தீவிரத்தை கட்டுப்படுத்த தொற்று அதிகமுள்ள இடங்களில் மட்டும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உணவகங்களில் சூடான குடிநீர் வழங்கும், குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் உணவகங்களுக்கு வழக்கப்படும் குடிநீரில் அரசால் வரையறை செய்யப்பட்ட அளவில் குளோரினேஷன் செய்து குடிநீர் வினியோகம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் விடுதிகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் குடிநீரில் குளோரினேற்றம் செய்யப்பட்டு உள்ளதா என உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் வெளியிட்டுள்ள தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: