வந்தவாசி நகராட்சியில் சேதமான குடிநீர் பைப்லைன் சீரமைப்பு பணி தீவிரம்

வந்தவாசி :  வந்தவாசி நகராட்சியில் சேதமான குடிநீர் மெயின் பைப்லைன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.வந்தவாசி நகராட்சி பகுதிகளுக்கு தேவையான குடிநீர் 18 கிலோ மீட்டர் தூரம் உள்ள செய்யாற்றில் இருந்து பைப்லைன் மூலம் கொண்டு வந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மெயின் பைப்லைன் ஆரணி நெடுஞ்சாலை வழியாக வந்தவாசி நகராட்சி அலுவலகம் அருகே வருகிறது.  தற்போது, ஆரணி சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடந்து வருகிறது.

இந்த சாலையில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் அருகே உள்ள சிறுபாலத்தை அகலப்படுத்தும் பணிக்காக ஜேசிபி மூலம் நேற்று முன்தினம் பள்ளம் தோண்டியபோது குடிநீர் மெயின் பைப் உடைந்தது. இதனை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பைப்லைன் உடைந்துவிட்டதால் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 5வது வார்டுவரை குடிநீர் விநியோகம் செய்வது தடைபட்டுள்ளது.

தொடர்ந்து, பைப்லைன் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் இன்றும் குடிநீர் விநியோகம் தடைபடும் எனவும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: