காரைக்காலில் காலரா பரவல்: 144 தடை உத்தரவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குடிநீரில், கழிவு நீர் கலந்ததன் காரணமாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருநள்ளாறு நெடுங்காடு கோட்டுச்சேரி டி.ஆர். பட்டினம், அம்பகரத்தூர் பூவம் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் ஜிப்மர் மருத்துவ குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடந்த 2 வாரங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி காரணமாக 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துறை தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களில் 700 பேர் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 பேருக்கு காலரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலையை (144 தடை உத்தரவு) சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர், புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் காலரா நோய் பாதிப்பு பற்றி நேற்று ஆய்வு நடத்தியபிறகு இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

* பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாள் விடுமுறை

மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று பரவா வண்ணம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பாலிடெக்னிக்  தேர்வுகள் வழக்கம் போல் இன்று நடைபெறும் என்று புதுச்சேரி மாநில பள்ளி கல்வி இயக்குநர் ருத்ர கவுடா தெரிவித்துள்ளார்.

Related Stories: