பெரியாறு அணைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க வசூல்வேட்டை கேரளாவில் மீண்டும் விஷமப் பிரசாரம்: நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்

கூடலூர்: மீண்டும் முருங்கை மரமேறும் வேதாளமாக, தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் மீண்டும் விஷமப் பிரசாரம் தொடங்கி உள்ளது. விஷமப் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர், பாசனத்துக்கான முக்கிய நீர் ஆதாரமான பெரியாறு அணை உள்ளது. இந்த அணை பலமாக இருக்கிறது என்று கடந்த 2006 மற்றும் 2014ம் ஆண்டுகளில் திட்டவட்டமாக இரு தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் தெளிவாக கொடுத்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரசல் ஜோய் விஷமப் பிரசாரம் நடத்தி வருகிறார்.

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் பெரியாறு அணைக்கு எதிராக கடந்த சில நாட்களாக மீண்டும் விஷமப் பிரசாரம் தொடங்கி உள்ளது. இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி வழக்கறிஞர் ரசல் ஜோய் தலைமையிலான ‘சேவ் கேரளா பிரிகேட்’ அமைப்பினர், 10 லட்சம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்ப இயக்கம் நடத்தி வருகின்றனர். மேலும், முல்லைப் பெரியாற்றின் விவரங்கள் குறித்து 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்றை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். தமிழ், ஆங்கில மொழிகளிலும் வெளியாக உள்ள இந்த ஆவணப்படம் தயாரிக்க 30 லட்சம் ரூபாய் தேவை என்றும், தங்களுக்கு நன்கொடை அனுப்புமாறு, மார்ட்டின் ஜோசப் மற்றும் ரசல் ஜோய் இருவரின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கி வசூல் வேட்டையை தொடங்கியுள்ளனர். இதை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இது தமிழக விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘2018ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பெரியாறு அணைக்கு எதிராக விஷமப் பிரசாரம் செய்து வருகிறார் இந்த வழக்கறிஞர் ரசல் ஜோய். இப்பொழுது லட்சக்கணக்கில் வசூல் செய்து ஆவணப்படம் எடுக்க முயல்வது தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவது போல் உள்ளது. கேரள அரசு இதுபோன்ற விஷமப் பிரசாரங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்க முயலும் இவர்களை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஒடுக்க வேண்டும்’’ என்றார்.

* உறுதியை நிரூபித்த திமுக அரசு

பெரியாறு அணை நீர்மட்டம் கடந்தாண்டு 136 அடியை தொட்டபோது, கேரளாவில் வக்கீல் ரசல் ஜோய் தலைமையிலான ‘சேவ் கேரளா பிரிகேட்’ அமைப்பு, இடுக்கி எம்பி டீன் குரியகோஸ், முன்னாள் எம்பி ஜோய்ஸ் ஜோர்ஜ், பீர்மேடு எம்எல்ஏ வாழூர் சோமன், முன்னாள் அமைச்சர் பி.ஜே.ஜோசப், மலையாள திரைப்பட நடிகர் பிரிதிவிராஜ் உள்பட பலர் பெரியாறு அணை உடைந்து விடும். புதிய அணை, புதிய ஒப்பந்தம் என உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி போராட்டங்கள் நடத்தினர். ஆனால், கடந்த நவம்பர் 30ல் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது. அன்று முதல் தொடர்ந்து 12 நாட்கள் 142 அடியாகவும், அடுத்த 18 நாட்கள் 141.50 அடிக்கு குறையாமலும் தண்ணீரை நிலைநிறுத்தி, பெரியாறு அணை இன்னமும் பலமாகத்தான் உள்ளது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உறுதி செய்ததோடு, அணையில் தமிழக உரிமையையும்  நிலைநாட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: