மகனின் திருமணத்துக்கு வந்த மொய்ப்பணத்தை காப்பகத்துக்கு வழங்கிய ஓய்வு நூலகர்: பாராட்டு குவிகிறது

மயிலாடுதுறை: மகனின் திருமணத்துக்கு வந்த மொய்ப்பணத்தை ஓய்வு பெற்ற நூலகர் ஒருவர், மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகத்துக்கு வழங்கினார். அவரை பலரும் பாராட்டினர். மயிலாடுதுறை திருவிழந்தூர் தென்னமர சாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார். ஓய்வு பெற்ற நூலகர். இவரது மகன் திருமணம் மயிலாடுதுறையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. திருமண அழைப்பிதழிலேயே ஓய்வு பெற்ற நூலகர் ஜெயக்குமார் மொய், அன்பளிப்பைத் தவிர்க்க வேண்டும். அந்த தொகையை ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இருப்பினும் அன்பின் காரணமாக தனது வீட்டு திருமண விழாவுக்கு மொய் செய்தவர்களை மறுக்க முடியாததால் திருமண மண்டபத்திலேயே உண்டியல் ஒன்றை வைத்து விட்டார். தனக்கு வழங்கும் மொய் பணத்தை அந்த உண்டியலில் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில் வசூலான ரூ.83 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் மேலும் 17 ஆயிரத்தை சேர்த்து ரூ.1 லட்சத்தை மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகங்களுக்கு அவர் நேற்று பிரித்து வழங்கினார். மகனின் திருமணத்துக்கு பெண் வீட்டாரிடமும் வரதட்சணை பெற்றுக்கொள்ளாத ஓய்வு பெற்ற நூலகர் ஜெயக்குமார் குடும்பத்தினர், மொய்ப்பணமாக வந்த தொகையினையும் சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கிய செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: