தமிழகத்தில் 174 உற்பத்தி ஆலைகள் மூடல் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சேலம்: தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வருவது முற்றிலும் தடுக்கப்படும் என்று  சேலத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார். தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று சேலம் வந்தார். அவர், சேலத்தின் மையப்பகுதியில் ஓடும் திருமணிமுத்தாற்றை ஆய்வு செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: குப்பைகளை எரிக்கக்கூடாது. வெளியேறும் கார்பன் சுற்றுச்சூழலை பாதிக்கும். அதுவும் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களை எரித்தால், அதில் இருந்து வெளியேறும் டயாக்சின் வேதிப்பெருள் புற்றுநோயை உண்டாக்கும். அதனால், மக்கள் குப்பைகளை எரிக்காமல், கவனமுடன் செயல்பட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர், ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தமிழக முதல்வர், ‘எங்கள் குப்பை, எனது குப்பை, எனது பெருமை’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என மக்கள் பிரித்தெடுத்து வழங்குவதால், ஒட்டுமொத்தமாக அனைவரும் நலம் பெற இயலும். தற்போது ஒன்றிய அரசு பிளாஸ்டிக் பொரு ட்களுக்கு தடை விதித்திருப்பது வரவேற்புக்குரியது. தமிழகத்தில் இதுவரை 1,177 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 174 பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. ரூ.105 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் வருவது முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Related Stories: