அதிமுக பொதுக்குழுவில் பெரும் தொகை பட்டுவாடா: எடப்பாடிக்கு மெஜாரிட்டி கிடைத்த ரகசியத்தை அம்பலபடுத்தினார் புதுச்சேரி மாநில செயலாளர்

புதுச்சேரி: அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு  பெரும் தொகை தரப்பட்டதை புதுச்சேரி  மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர்  அம்பலபடுத்தி யுள்ளார். ஓ.பி.எஸ்சை கழற்றிவிட்டுவிட்டு அதிமுக கட்சியை முழுமையாக கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார். கடந்த மாதம் 23ம் தேதி சென்னையில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அவமதிக்கப்பட்டார். பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவு எடப்பாடி தரப்புக்கு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

பணத்தை கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு  தனது ஆதரவாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், பணம் பட்டுவாடா பற்றி பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் பகிரங்கமாக கூறவில்லை. இந்த நிலையில் புதுச்சேரி அதிமுகவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் எதிரொலியாக பொதுக்குழுவில் பணம் கொடுக்கப்பட்டதை அம்மாநில அதிமுக செயலாளரே அம்பலபடுத்தியுள்ளார். புதுச்சேரி  அதிமுகவை பொறுத்தவரை கிழக்கு மாநில செயலாளராக அன்பழகனும், மேற்கு மாநில  செயலாளராக ஓம்சக்தி சேகரும் இருந்து வருகின்றனர்.

இப்போது, அவர்களும் மாநில  செயலாளராக ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறி மோதி வருகிறார்கள்.  இது தொடர்பாக  புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர்  நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக  கண்டிப்பாக பிளவுப்பட போகிறது. கட்சிக்கு இனி ஒற்றை தலைமைதான். இரட்டை  தலைமை ஏற்புடையதல்ல.  இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் இரு கண்களாக  பார்க்கிறேன். பொதுக்குழு கூட்டத்தில் கொடுத்த மிகப்பெரிய தொகையை அன்பழகன்  வாங்கி வந்து அவரது வீட்டில் வைத்துக் கொண்டார்.

ஒரு பொதுக்குழு உறுப்பினருக்காவது அந்த பணத்தை கொடுத்தாரா? இது தவறில்லையா? யார் கையில் கட்சி, கொடி, சின்னம் உள்ளதோ, அங்கு  புதுச்சேரி மாநில அதிமுகவினர் எனது தலைமையில் செயல்படுவார்கள். அன்றைய  தினத்தில் இருந்து அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார். தமிழகத்தில் அதிமுக  ஒற்றை தலைமை ஏற்றவுடன் புதுச்சேரியில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக நான்தான்  இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். புதுச்சேரி அதிமுக கோஷ்டி மோதலில் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து மெஜாரிட்டி ஆதரவு திரட்டிய ரகசியம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Related Stories: