அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் அதிகளவில் நியமனம்; முத்தரசன் கோரிக்கை

ஓசூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகர 23வது மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, பிரதிநிதிகள் தேர்வான நிலையில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதன் மீது தனி கவனம் செலுத்தி, மக்களின் முக்கிய பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் அறிவித்த ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற அறிவிப்புகளை நிறைவேற்றவும், பாரம்பரிய ராணுவ தேர்வு, அதன் பணிகள் குறித்த நடைமுறையை, அக்னிபாதை திட்டத்தின் கீழ் மாற்றுவதை தடுக்க நடைபெறும் போராட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

உலகிலேயே மிக சிறப்பான ராணுவத்தின் பணிகளை குறைத்து, புதிய முறையில் தேர்வு செய்வது குறித்து ராணுவ தளபதி விளக்கம் கொடுக்காமல், போராடும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது ஆரோக்கியமானது அல்ல. கொரோனா  தொற்று காரணமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்னைகளை சரிசெய்ய மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். மக்களின் ஆரோக்கியம் மேம்படும் வகையில் அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி சிகிச்சை வழங்க மருத்துவர்கள், செவிலியர்களை அதிகளவில் நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: