சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 40 லட்சம் செலவில் கட்டிய வணிக வளாகம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 40 லட்சம் செலவில் கட்டிய வணிக வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் நெல்கொள்முதல் செய்வதில் தமிழகத்தில் 2வது இடத்திலும், மாவட்டத்தில் முதல் இடத்திலும் உள்ளது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வருவாய் ஈட்டும் வகையில், சென்னை தமிழ்நாடு வேளாண்மை விற்பனை நிலையம் சார்பில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் 2019-2020ம் ஆண்டு நபார்டு வங்கி மூலம் ₹40 லட்சம் செலவில் 10 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டது.

இந்த வணிக வளாகத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஏதோ காரணத்தால் இந்த வணிக வளாகம் இதுவரையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் வணிக வளாகம் திறக்கப்பட்டதன் நோக்கம் விவசாயிகளை சென்றடையாத நிலை உள்ளது. மேலும், வருவாய் இழப்பும், எந்தவித பயன்பாடும் இல்லாமல் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி இந்த வணிக வளாகம் மூடியே கிடப்பதால் கட்டிடங்கள் சேதம் அடையும் நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள வணிக வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: