பந்தலூர் அருகே வீடுகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்

பந்தலூர்:  பந்தலூர் அருகே அரசு தேயிலை தோட்டம் டேன்டீ  பாண்டியார் சரகம் 4 பி பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அப்பகுதியில் வசித்து வரும் மருதை, கண்ணா ஆகியோரின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. கண்ணா என்பவரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த காட்டு  யானைகள் வீட்டில் இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை துதிகையால் எடுத்து வெளியே வீசியது.  அப்போது, வீட்டில் இருந்த  கண்ணா மற்றும் குடும்பத்தார் அலறி அடித்து பின்பக்க வழியாக அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து தப்பினர்.

காட்டு யானைகளை தொழிலாளர்கள் சத்தமிட்டு வனப்பகுதிக்குள் விரட்டினர். இச்சம்பவம் குறித்து தேவாலா வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது வனச்சரகர் அய்யனார் மற்றும் டேன்டீ கோட்ட  மேலாளர் ஸ்ரீதர், நெல்லியாளம் வார்டு கவுன்சிலர் புவனேஷ்வரி, திமுக வார்டு செயலாளர் தில்லைநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சேதம் குறித்து ஆய்வு செய்தனர்  வீடுகளை இடித்து சேதம்  செய்யும் காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், இரண்டு வாகனங்களில் 10 பேர் கொண்ட வனக்குழுவினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினர்.

Related Stories: