மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்; முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே.! பாஜவின் பட்நவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றார்

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. பாஜ.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனா அதிருப்தி  எம்எல்ஏ.க்கள் அணியின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி  ஏற்றார். பட்நவிஸ் துணை முதல்வராக  பதவியேற்றார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து, ‘மகாராஷ்டிரா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. முதல்வராக இக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி வகித்தார். இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி உத்தவ் அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, கட்சியை உடைத்தார்.

சிவசேனா எம்எல்ஏ.க்கள் 39 பேர், அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சிறிய கட்சிகள், சுயேச்சை எம்எல்ஏ.க்களுடன் குஜராத் மாநிலம், சூரத்துக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து அசாம் மாநிலம், கவுகாத்தி சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கினார். சிவசேனா கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் நேற்று பெரும்பான்மையை நிருபிக்கும்படி உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து சிவசேனா தொடர்ந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இதனால், சட்டப்பேரவையில் நேற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது.இந்நிலையில், அசாமில் இருந்து அதிருப்தி எம்எல்ஏ.க்களுடன் மும்பை திரும்பிய ஷிண்டே, பாஜவை சேர்ந்த இம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிசை சந்தித்தார். பின்னர் இருவரும், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதைத் தொடர்ந்து,  நேற்றிரவு 7.30 மணிக்கு பதவி ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது. பட்நவிஸ் முதல்வராகவும், ஷிண்டே துணை  முதல்வராகவும் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ஷிண்டே முதல்வராகவும், துணை முதல்வராக பட்நவிசும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் புதிய முதல்வராக  ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றார். இருவருக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம்  செய்து வைத்தார். இவர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா. பாஜ தலைவர் நட்டா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இவர்களுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ.க்களும், பாஜ.வை சேர்ந்தவர்களும், சுயேச்சைகளும் இன்று அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தெரிகிறது.

Related Stories: