மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி: முதல்வராக இன்றே பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்?

மும்பை: இன்று மாலை 7 மணிக்கு மகாராஷ்டிர முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே நேற்றிரவு ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பாஜ தலைமையிலான புதிய கூட்டணி அரசு நாளை பதவியேற்க உள்ளது. பாஜவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்தது.

இந்நிலையில், இவருடைய அமைச்சரவையில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனாவை சேர்ந்த 40 அதிருப்தி எம்எல்ஏ.க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இவர்கள் தனி அணியாக ஷிண்டே தலைமையில் முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் தங்கினர். பின்னர், அங்கிருந்து அசாம் மாநிலம், கவுகாத்திக்கு சென்று சொகுசு ஓட்டலில் தங்கினர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடனான கூட்டணியை முறித்து கொண்டு, பாஜவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்படி அவர்கள் நிபந்தனை விதித்தனர். இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா முடிவு செய்தது.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சபாநாயகர் பதவி காலியாக உள்ள நிலையில் துணை சபாநாயகர் நர்ஹரி ஜெர்வாலிடம், 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும்படி சிவசேனா மனு அளித்தது. அதன்படி அந்த 16 எம்எல்ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு துணை சபாநாயகர் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் 16 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு அதுவரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. மேலும் இதுதொடர்பாக மகாராஷ்டிரா அரசு மற்றும் துணை சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் திடீரென மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டசபையில் நாளை (இன்று) பெரும்பான்மையை நிரூபிக்கும்படியும், காலை 11 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்றும்,  சட்டமன்ற செயலருக்கு ஆளுநர் கோஷ்யாரி நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார். முன்னதாக மகாராஷ்டிரா ஆளுநரை பாஜ தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரபு, உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஆளுநர் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

உச்சநீதிமன்றமோ, நம்பிக்கை வாக்க்கெடுப்பு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் நேற்றிரவு முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து நள்ளிரவில் ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதே கையோடு நள்ளிரவில் கோயில்களுக்கும் சென்று உத்தவ் தாக்கரே வழிபாடு நடத்தினார். உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை இனிப்புகள் வழங்கி பாஜவினர் கொண்டாடினர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜ முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுபற்றி மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் விசாரித்த போது, பாஜ ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த கட்சியின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

கவர்னரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு மகாராஷ்டிர முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மராட்டிய முதலமைச்சராக பதவி வகித்த பட்னாவிஸ் 3வது முறையாக பதவியேற்க உள்ளார். சிவசேனா அதிருப்தி அணியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: