16ம் நூற்றாண்டை சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டு பிடிப்பு

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே 16ம் நூற்றாண்டை பழமையான கலிங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.கள்ளிக்குடி அடுத்த உவரி கிராமத்தில் பெரியகண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வில்லூரினை சேர்ந்த சமூக ஆா்வலர் பாலமுருகன் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் இங்கு ஆய்வு நடத்தினர். களஆய்வில் கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கலிங்கு பகுதியில் லிங்கவடிவ தனி தூணில் கல்வெட்டு இருந்தது தெரியவந்தது.

கல்வெட்டினை ஆய்வு செய்த போது, கிபி 16ம் நூற்றாண்டை சேர்ந்த நீர்பங்கீடு முறை கல்வெட்டு என்பது தெரியவந்தது. இது குறித்து பேராசிரியர் முனீஸ்வரன் கூறுகையில், பண்டைய தமிழர்நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். மழைநீரினை சேமிப்பது, சேமித்த நீரினை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணை கட்டுகள், வாய்கால்களையும் அமைத்துள்ளனர். இவற்றோடு தொடர்புடைய நீர்பங்கீடு முறையைதான் சங்க காலம் முதல் தொன்றுதொட்டு நாம் பின்பற்றி வருகிறோம்.கலிங்கு என்பது கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் முறைப்படுத்தி வெளியேற்றுவதற்கு கற்களால் அமைக்கப்படுவதாகும். இவை கலிங்கல், கலிஞ்சு எனவும் அழைக்கப்பட்டுள்ளது. கலிங்குகளில் வரிசையாக குத்துகற்களை ஊன்றி உள்பகுதியில் ஒரே மாதியான இடைவெளி விட்டு பலகை, மணல் மூட்டைகள் சொருகப்படுவதால் கண்மாய் நிரம்பிய பின் நீர் மறுகால் பாயும்.

இந்த இடத்தில் கலிங்கு அமைந்திருக்கும். இதனால் நீர்வெளியேறும் அளவு முறை ஒழுங்குபடுத்தப்படுகிறது. கல்வெட்டு செய்தி. உவரி பெரிய கண்மாய்நீா் நிரம்பி வெளியேறும் கிழக்கு பகுதியில் தற்போது கண்டெக்கப்பட்ட லிங்க வடிவ கலிங்கு தூண் கல் 5 அடி உயரம், 1 அடி அகலம் கொண்டுள்ளது. இதில் 6 வரி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. களஆய்வு செய்த போது முதல் இரண்டு வரிகள் தேய்மானமாக இருப்பது தெரியவந்தது.காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த என்ற எழுத்து மட்டும் தெரியவந்துள்ளது. உவரி பெரிய கண்மாயிலிருந்து நீர் நிரம்பிய பிறகு அருகேயுள்ள தென்னமநல்லூர், புளியங்குளம் கண்மாய்க்கு நீரோடை வழியாக செல்லும். இவ்வூருக்கு நீரை பணிக்கர் என்ற குழுவினர் சரிபாதியாக பிரித்து கொடுத்துள்ளது என்பதனை இந்த கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது என்றார்.கள ஆய்வில் வரலாற்று ஆர்வலர்கள் அனந்தகுமரன், தங்கபாண்டி, அஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: