ஊட்டியில் சுற்றித்திரிந்த குதிரைகள் சிறைபிடிப்பு: உரிமையாளர்களுக்கு அபராதம்

ஊட்டி: ஊட்டி நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த குதிரைகள் நகராட்சி மூலம் சிறைபிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுலா நகரமாக ஊட்டியில் குதிரை சவாரி பிரசித்தி பெற்றது. இதனால், ஊட்டி நகரில் ஏராளமான குதிரைகள் உள்ளன. சவாரிக்கு பயன்படுத்தப்படும் இந்த குதிரைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. உணவு, தண்ணீர் ேதடி ஊட்டி நகரின் முக்கிய சாலைகள், உணவகங்கள், மார்க்கெட் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. இதேபோல் மாடு, ஆடு போன்ற கால்நடைகளும் மேய்ச்சலுக்காக ஊட்டி நகருக்குள் விரட்டி விடுகின்றனர்.

இவை மார்க்கெட் வெளிப்புறம் புளூமவுண்டன், சேட் மகப்பேறு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதி, மாரியம்மன் கோயில், மணிகூண்டு, கமர்சியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிதிரிவதுடன் சாலையிலேயே படுத்து கொள்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கால்நடைகளின் உரிமையாளர்கள் நகரில் அவற்றை உலாவ விடுவதை தவிர்க்க வேண்டும். மீறும் பட்சத்தில் நகரில் உலா வரும் குதிரைகள், கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், அவை ஏலம் விடப்படும் என நகராட்சி எச்சரித்தது.

இருப்பினும், ஊட்டி நகரில் கால்நடைகள் நடமாட்டம் குறைந்தபாடில்லை. இதனால், நகராட்சி ஆணையர் காந்திராஜன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மகாராஜன், மேற்பார்வையாளர்கள் செல்வராஜ், கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் காந்தல், படகு இல்லம், கமர்சியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இடையூறாக சுற்றித்திரிந்த சுமார் 2க்கும் மேற்பட்ட குதிரைகளை சிறைபிடித்தனர். தொடர்ந்து அவற்றின் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: