உத்திரமேரூரில் நடைப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ஜேஜே நகர் பகுதியில் நடைப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஜேஜே நகர் பகுதியில் 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தொட்டிக்கு அருகே அப்பகுதி மக்களின் வழிபாட்டுத்தளமான கன்னியம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில்கள் உள்ளன. மேலும், இதற்கு அருகே கிராமத்திற்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள சுமார் 40 ஏக்கர் விவசாய நிலத்திற்கு செல்வதற்காக நடைபாதையாகவும் இந்த பாதை உள்ளது.இதன் வழியாகா கோயிலுக்கு வழிபடும் பக்தர்கள், விவசாய நிலத்திற்கு செல்பவர்களும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்களும் இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த பாதையினை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கட்டுமானப்பணியினை மேற்கொண்டு வருகிறது. இதனால், கோயிலுக்கு செல்லும் பழங்குடியின பக்தர்கள் விவசாய நிலத்திற்கு செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் என அப்பகுதியினை சேர்ந்த அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழிவகை செய்து தர வேண்டி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: